Karikala Cholan


              கரிகால சோழ சூரிய முத்தரையர்
புதுக்கோட்டை மாவட்டம் திருமலைராயா சமுத்திரம் என்னும் ஊரிலிருந்து திருமலைநம்பி என்பவர் எழுதிய கடிதத்தில்தான் அவ்வருமையான செய்தி இருந்தது. அவர் தாம் கண்ட ஒரு செப்பேடடில் "கரிகால சோழ குழுவினராகிய சூரிய முத்தரையர்" என்ற வாசகம் உள்ளது என்றும், அச்செப்பேடு திருவரங்குளம் கிராமம் கோவில்பட்டியில் உள்ள பிச்சன் என்பவரிடம் என்றும் உள்ளது என்றும் எழுதியிருந்தார். "கரிகால சோழ குழுவினராகிய சூரிய முத்தரையர்" என்ற செய்தி தமிழ் வரலற்றுக்கு அருமையான செய்தி. முத்தரையர்கள் கரிகாலனோடு தொடர்பு கொண்டவர்கள் என்பதும்,  
                                                                                                  http://www.facebook.com/groups/mutharaiyar/ 
சூரியகுலத் தொடர்பு கொண்டவர் என்பதும் தெளிவாகிறது அல்லவா? சோழர்கள் சூரியவம்சத்தைச் சேர்ந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே.
கரிகாலன் மைசூர் தலைக்காடு பகுதியை ஆண்ட கங்கர்கள் தம்மை விருத்தராஜா முத்தரைசர் என்று அழைத்துக் கொண்டார்கள் என முன்னே கண்டோம். இவர்கள் தமிழ் முதுகுடிமக்கள் எனக் குறிப்பதற்கே தம்மை முதுஅரசர்-முத்தரசர் என்று கூறிக்கொண்டனர் எனக் கண்டோமல்லவா? கங்க அரசர்களில் கி.பி. 550லிருந்து 600க்குள் ஆண்ட துர்விநீதன் என்ற சிறந்த மன்னனின் தேவி ஒரு சோழ இளவரசியாவாள் அவள் "உரகபுரத்தை ஆண்ட கரிகால சோழனின் வழிவந்தவனும் பரம க்ஷத்திரியனுமான சோழ அரசனின் பெண்" என்று குறிக்கப்பெறுகிறாள். அதைக் குறிக்கும் செப்பேடு "உரகபுராதிப பரம க்ஷத்திரிய சோழகுலதிலக ஸ்ரீதக்தசரண சந்தான", தக்தசரண என்றால் தீயால் கருகிய காலை உடையவன். அவனது சந்தானம் வழித் தோன்றிய என்று பொருள். கரிகாலன் சிறுவனாக இருந்த போது தீயிலிருந்து தப்பினான். அப்பொழுது அவனது காலைத் தீ சுட்டதால் கரிகாலன் எனப் பெயர் பெற்றான் என்று பண்டைய தமிழ் வரலாறு கூறும். இத் தமிழ் மரபைக் கங்கர்களது செப்பேடுகள் உறுதி செய்கின்றன.
கங்க அரசன் துர்விநீதனுக்கு மகன் வயிற்று மகன் (பெயரன்) ஸ்ரீ விக்ரமன் என்று ஒருவன் இருந்தான். அவனும் பின்னர் கங்க அரியணை ஏறினான். அவனும் சோழ இளவரசியை மணந்தான். அவளைக் கூறும்போது கங்கர் செப்பேடு "காவிரிக்குக் கரை கட்டிய கரிகால சோழனின் குலத்து உதித்தவள்" என்று "காரித காவேரீதீர கரிகால சோழ குலவம்ச சோழ நிருபதி புத்ரீ" எனப் புகழ்கிறது. கங்கர்கள் தம்மைக் கரிகால சோழ குலப் பெண் வழி வந்தவர்கள் என்று கூறிப் பெருமைப்படுகிறார்கள்.
இருவரும் ஒரு குடியினர்
இப்பொழுது பாருங்கள்! எங்கேயோ மைசூர்ப் பகுதியை 1300 வருஷங்களுக்கு முன் ஆண்ட கங்க அரசர்கள் தம்மை முத்தரையர் என்றும், கரிகால சோழகுலத் தொடர்புடையவர் என்றும் தமது செப்பேடுகளில் கூறிக் கொள்கிறார்கள்.
தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏதோ ஒரு கிராமத்தில் ஒரு தமிழ்ச் செப்பேட்டில் முத்தரையர் கரிகால சோழ குலத் தொடர்புடையவர் என்று குறிக்கிறார்கள் என்றால், எவ்வளவு அரிய சான்றுடன் கூடிய வரலாற்று ஒற்றுமை. இவ்வொற்றுமையின் அடிப்படையில் இருவரும் ஒரு குடியினரே என்று வரலாற்று வல்லுநர் கொள்வது தவறாகாதல்லவா! சோழராட்சியிலும், பின்னர் பாண்டியராட்சியிலும் கி.பி. 10ஆவது நூற்றாண்டு முதல் 14-15ஆவது நூற்றாண்டு வரை கங்கர்முத்தராசர் குடியினர் புதுக்கோட்டைப் பகுதியில் தானைத் தலைவர்களாகவும் வளநாட்டை ஆளும் தலைவர்களாகவும் கல்வெட்டுக்களில் குறிக்கப்படுகின்றனர்.
புதுக்கோட்டைப் பகுதியில் இன்று வாழும் முத்தரையர் இவ்வழித் தொடர்புடையவர்கள் என்பதில் ஐயமில்லை. இத்தொடர்பை நமக்குச் சான்றுகளோடு எடுத்து இயம்புவை நமது செப்பேடுகள் அல்லவா! இன்னும் நமது கிராமங்களில் உள்ள செப்பேடுகளில் எவ்வளவு வரலாற்று உண்மைகள் உள்ளனவோ! இவற்றை நம் கவனத்துக்குக் கொண்டு வருவோருக்கு நாம் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம்.
                                                                                       http://www.facebook.com/groups/mutharaiyar/
                                                                    தவம் செய்த தவம்
                                                             
டாக்டர். இரா. நாகசாமி


No comments:

Post a Comment